கோவளம் கழிமுகம் ஒருபுறம், தொழில்நுட்ப சாலை மறுபுறம் என இயற்கை மற்றும் நகரமயமாக்கலுக்கு நடுவே போராடி வந்த ஒரு நீர் ஆதாரம் கோலப்பன்சேரி. நாட்கள் நகர, காட்சிகள் மாற ஏரியின் பெயர் அறச்சி எனவும் மாறியது. மாறியது பெயர் மட்டும் அல்ல, நீர் ஆதாரத்தின் எல்லை பகுதிகளும் கூட. உள்ளூர் அரசியல் பெரும்புள்ளி ஒருவர் சுமார் 25 ஆண்டுகளாக நீர் ஆதாரத்தின் வடகிழக்கு பகுதியின் பெரும்பான்மை பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார், ஊர் தலைவர் வழி பின்பற்றிய உள்ளூர் தொண்டர் ஒருவர் தென் பகுதியை தன் வசப்படுத்தினார்.
இப்படி எனக்கொன்று-உனக்கொன்று என நீராதாரத்தை பலர் பிரித்துக்கொள்ள, ஊர்க்கொடியில் எங்கோ உள்ள இந்த ஏரி மெல்ல சுருங்கிவந்தது.
சென்னை பெருவெள்ளம் அதை தொடர்ந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி என ஒன்றின்பின் ஒன்றாக நீர் சார்ந்த அசம்பாவிதங்கள், நீர் ஆதாரங்களை காப்பதில் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதன் ஒருபகுதியாக, படூர் பகுதியை சார்ந்த சில நகரவாசிகள் EFIஐ அணுகி இந்த கோலப்பன்சேரி நீர் நிலையை புனரமைக்க விருப்பம் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து ஒரு கூட்டு முயற்சியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரிடம் களப்பணிக்கு அனுமதி பெற்று, வருவாய் துறை அதிகாரிகள் நீர் நிலையின் உண்மை எல்லை நிர்மாணிக்கப்பட்டு, சுமார் 60 நாட்களுக்கு மேலாக இந்த ஏரியின் புனரமைப்பு பணி வேகமாக நடைபெற்று வருகின்றது.
1. குப்பைகள் அகற்றி
2. சீமை கருவேலம் போன்ற வேற்று தாவரங்கள் அகற்றி
3. அறிவியல் பூர்வமாக தூர்வாரப்பட்டு
4. ஏரி சுற்றிலும் இரட்டை கரை அமைக்கப்பெற்று
5. பல்லுயிரின பெருக்க தீவுகள் அமைக்கப்பட்டு
6. வரத்து-போக்கு வாய்க்கால்கள் சரி செய்யப்பட்டு
7. சுற்று வேலி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கூட்டுமுயற்சி வெற்றி ஈட்டும் என்பதற்கு இந்த ஏரி மீட்கப்படுவதே சிறந்த உதாரணம். மெல்ல சுருங்கி காணாமல் போயிருக்க வேண்டிய கோலப்பன்சேரி இன்று புது பொலிவுடன் பழைய எல்லைகளோடு கம்பீரமாய் ஒளிர்கிறது.
இதற்க்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எங்களின் நன்றி.