இளைய தலைமுறையினர் மத்தியில் சுற்றுச்சூழல் ஆர்வத்தை தூண்டும் முயற்சி – “E.F.I’s மாஸ்டர் கிளாஸ்”

கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பையில் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை(E.F.I) அதன் பிரத்தியேக பயிற்சி முகாமான “இந்திய சுற்றுச்சூழல் மாஸ்டர் கிளாஸ்” என்ற இளைஞர்களுக்கான நிகழ்ச்சியை நடத்தியது. பல்வேறு நகரங்களில் நடக்கவிருக்கும் இந்த மாஸ்டர் கிளாஸின் முதல் பாகத்தை தெலுங்கானாவின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான மேதகு டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பல்வேறு வேலை சுமைகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

E.F.Iயின் இந்த மாஸ்டர் கிளாஸில் மும்பையை சேர்ந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மேதகு ஆளுநர் அவர்கள் தமிழர்களின் நீர் மேலாண்மையை பற்றியும் தமிழர்கள் பயன்படுத்திய வெவ்வேறு நீர் நிலைகள் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் மாணவ மாணவியர்களின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கமாக உரையாற்றினார். மேலும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் களப்பணியை பற்றி புகழ்ந்துரைத்தார்.

இந்த மாஸ்டர் கிளாசில் ஏரி, குளம், குட்டை; காடு, வயல், தோட்டம்; பாம்பு, பறவை, தவளை என நம்மை சுற்றி இருக்கும் அனைத்து நீர் நிலைகளை பற்றியும் காடுகளைப் பற்றியும் மரங்களைப் பற்றியும் உயிரினங்களை பற்றியும் மாணவ மாணவியர்களை சிந்திக்க வைக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மேலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தலைமை பண்பு, முடிவெடுக்கும் திறன், களப்பணி முதலியவை பற்றி எடுத்துக்காட்டுகளுடன் மாணவ மாணவியர்களுக்கு புரியும் வண்ணம் கற்றுக் கொடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக E.F.I மும்பையின் பிரபாதேவி, அஸ்கா ஆகிய கடற்கரை மற்றும் புனேவின் முலா முத்தா ஆற்றங்கரையில் தொடர்ச்சியாக நடத்தி வரும் தன்னார்வு நிகழ்வுகளின் விரிவாக்கத்தை பற்றியும் கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றது மற்றும் இன்றி E.F.I யுடன் களப்பணியில் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய விருப்பத்தையும் தெரிவித்தனர்.

Leave a Reply